மோட்டார் சைக்கிளால் மாணவனை மோதி தப்பிச்சென்ற பெண்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண், தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Apr 23, 2025 - 18:11
மோட்டார் சைக்கிளால் மாணவனை மோதி தப்பிச்சென்ற பெண்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண், தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று (22) வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவர், தன்னை மோதியதால் துவிச்சக்கரவண்டியுடன் தான் வீதியில் வழுந்துவிட்டதாக மாணவன் தெரிவித்துள்ளான்.

விபத்தில் சிக்கி காயங்களுடன் வீழ்ந்து கிடந்த நிலையில் அந்தப் பெண் அங்கிருந்து சென்றதாகவும் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் முன்பாக வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட மாணவர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்த தன்னை தூக்கிச் சென்று முதலுதவி அளித்ததாகவும், தான் விபத்தில் சிக்கியமை தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோருக்கு தெரியப்படுத்தியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கி கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மாணவன் உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் வீதி போக்குவரத்துக் கடமையில் வழமையாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த சில நாட்களாக போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!