சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்துசெய்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை.

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை.
ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை இளவரசரும், மக்கா பிராந்திய துணை கவர்னருமான சவுத் பின் மிஷால் பின் அப்துல்லாசிஸ், வர்த்தக மந்திரி மஜித் அல் கசாபி ஆகியோர் வரவேற்றனர்.
21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹஜ் யாத்திரை பற்றியும், அதில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பற்றியும் மோடி பேசினார். பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி இன்று ஒரு தொழிற்சாலைக்கு சென்று அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுடன் உரையாட திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களும் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.