தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட மருந்துகள் மீட்பு

Apr 28, 2025 - 11:20
தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட மருந்துகள் மீட்பு

அரசாங்க மருத்துவமனையொன்றில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள்  சனிக்கிழமை (26) மதியம் ஹட்டன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.   

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியிலிருந்து ஹட்டன் ஃப்ரூட்ஹில் தோட்டத்திற்கு செல்லும் வீதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மருந்துகள் ஒரு தொகை கிடப்பதாக தோட்ட நிர்வாகத்தால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஹட்டன் குற்றப்பிரிவு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருந்து தொகையை பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட மருந்துகள் காலாவதியானவை  என்றும், மருந்துகளை இரண்டு பைகளில் வைக்கப்பட்டு தேயிலைத் தோட்டத்தில் கொட்டப்பட்டிருந்ததாகவும், மருந்துகள் விற்பனை தடை என்று எழுதப்பட்ட பல லேபிள்கள் மற்றும் நுவரெலியா பிராந்திய சுகாதார அலுவலகத்தின் பெயர் அச்சிடப்பட்ட மருந்து உறையும் மருந்துகளின் இருப்புக்குள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காலாவதியான அரசு மருந்துகளை அப்புறப்படுத்துவதற்கு முறையான நடைமுறை இருந்தபோதிலும்,  இவ்வாறு தேயிலைத் தோட்டத்தில் கொட்டப்பட்டமை தொடர்பாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கைகள்  வழங்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஹட்டன் தலைமையக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.  

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!