கடும் பாதுகாப்புடன் இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை இன்று (20) கொண்டாடுகின்றனர்.

Apr 20, 2025 - 13:16
கடும் பாதுகாப்புடன் இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை இன்று (20) கொண்டாடுகின்றனர்.

மக்களை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்த நாளாக கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் பல்வேறு சடங்குகளை கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் 40 நாள் தவக்காலமும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.

இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களும் இன்று மிகுந்த ஆர்வத்துடன் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்று கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று (19) இரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் ஞாயிறு நள்ளிரவு வழிபாடுகள் நடைபெற்றன.

கொழும்பு, பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட சிறப்பு வழிபாடு நேற்று (19) இரவு கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித லூசியால் பேராலயத்தில் நடைபெற்றது.

அதேநேரம், இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் தெய்வீக வழிபாடுகளும் பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கிடையில், கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு நாளையுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2019 ஏப்ரல் 21, அன்று நடந்த இந்த தாக்குதலில் 273 பேர் உயிரிழந்ததுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், கடந்த 18 ஆம் திகதி புனித வெள்ளி முதல் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!