சீனாவில் பாகுபலி 2 வசூல் சாதனையை உடைத்த மகாராஜா!
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் மகாராஜா.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் மகாராஜா.
திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது.
மகாராஜா திரைப்படமானது சீனாவில் 40,000 திரைகளில் வெளியானது. சீனாவில் வெளியான இந்திய சினிமாக்களில், ரஜினியின் 2.O திரைப்படம் 48,000 திரைகளை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அதிகபட்சமாக 40,000 திரைகளில் மகாராஜா வெளியானது.
அடுத்தடுத்த இடத்தில் பாகுபலி 2 (18,000 திரைகள்), தங்கல் (9000 திரைகள்) முதலிய திரைப்படங்கள் உள்ளன. படத்தின் வெளியீட்டு உரிமையை வைத்திருக்கும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைன் நாட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவை யி ஷி பிலிம்ஸ் மற்றும் அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து இந்த வெளியீட்டை உறுதிப்படுத்தின.
இந்நிலையில் நவம்பர் 29-ம் தேதி சீனாவில் வெளியாகி அதன் திரைக்கதையால் சக்கைப்போடு போட்டுவரும் மகாராஜா திரைப்படம், வசூலிலும் 100கோடியை நெருங்கி வருகிறது.
சீனாவில் வெளியான 21 நாள் முடிவில் ரூ.85.75 கோடி வசூலை மகாராஜா படம் ஈட்டியுள்ளது. இது முந்தைய அதிகபட்ச தென்னிந்தியா சினிமாவான பாகுபலி 2-வின் 80.50 கோடி வசூலை உடைத்துள்ளது.
இதன்மூலம் சீனாவில் அதிக வசூலை ஈட்டிய முதல் தென்னிந்திய சினிமாவாக ஒரு தமிழ்படம் பெருமை சேர்த்துள்ளது. விரைவில் மகாராஜா படம் சீனாவில் 100 கோடி வசூலை நெருங்கும் நிலையில், உலகளவில் 200கோடி என்ற மார்க்கை மகாராஜா எட்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.