பிரபல அமெரிக்க பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

பிரபல அமெரிக்க பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். 

அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, "அவர்கள் வியன்னாவின் எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகளை குறிவைத்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட 19 வயதான நபர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாளராக இருந்துள்ளார். கைதான இருவரும் ஆன்லைனில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர்" என்று கூறினர்.

இந்த நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதால், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்களுக்குள் திருப்பித் தரப்படும்" என்று கூறினர்.