கால்பந்து மைதானத்தில் ஹிஸ்புல்லா தாக்குதல்: 12 பேர் பலி
ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலால் கொந்தளித்த பிரதமர் நேதனயாகு ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி, அது எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் இந்த கால்பந்து மைதான தாக்குதல் குறித்து பேசியுள்ள அவர், ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தாக்குதல் மேலும் ஒரு போர் உருவாகும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிகாவில் உள்ள நேதனயாகு உடனடியாக நாடு திரும்ப உள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.