Mufasa: The Lion King Movie Review - முபாசா ‘தி லயன் கிங்’ விமர்சனம்

‘தி லயன் கிங்’ படத்தைப் பார்த்து பிரமித்தவர்கள் பலர். உயிரோட்டத்துடன் சிங்கம் முதல் பல காட்டு விலங்குகளைப் புனைவுக் கதைக்குள் அடக்கியிருந்தது அப்படம்.

Mufasa: The Lion King Movie Review -  முபாசா ‘தி லயன் கிங்’ விமர்சனம்

‘தி லயன் கிங்’ படத்தைப் பார்த்து பிரமித்தவர்கள் பலர். உயிரோட்டத்துடன் சிங்கம் முதல் பல காட்டு விலங்குகளைப் புனைவுக் கதைக்குள் அடக்கியிருந்தது அப்படம்.

அதுவே 1994இல் வெளியான முழுமையான அனிமேஷன் படத்தின் மறு ஆக்கம் தான். இந்த நிலையில், அந்தக் கதையில் வரும் சில பாத்திரங்களின் முன்கதையைச் சொல்வதாக உருவாக்கப்பட்ட ‘முபாசா’ தற்போது உலகெங்கும் வெளியாகியிருக்கிறது.

‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மசேகோ – ஆபியா எனும் இரண்டு சாதாரண சிங்கங்களுக்குப் பிறந்த ஆண் குட்டி தான் முபாசா. ஒருநாள் காட்டு வெள்ளத்தில் முபாசா சிக்கிக்கொள்கிறது. அதனைக் காப்பாற்ற மசேகோவும் ஆபியாவும் எடுத்த முயற்சிகளுக்குப் பலன் இல்லை.

வெள்ளத்தில் சென்ற முபாசா கண் விழித்துப் பார்க்கையில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீராகவே தெரிகிறது. அப்போது, ஒரு மரக்கட்டை மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் அருகில் வருகிறது. அதனைப் பிடித்துக்கொண்டபிறகு மீண்டும் மயங்குகிறது.

ஒருவழியாகக் கண் திறந்து பார்க்கும்போது, பசுமை சூழ்ந்த ஒரு காட்டைக் காண நேர்கிறது. அப்போது டாகாவின் அறிமுகம் முபாசாவுக்குக் கிடைக்கிறது. டாகாவின் தாய் ஈசே, நீரில் இருக்கும் முதலைகளின் பிடியில் இருந்து முபாசாவைக் காக்கிறது. தன்னுடன் அழைத்துச் செல்கிறது.

அப்பகுதியின் சிங்கராஜாவான, தனது கணவர் ஒபாசியிடம் முபாசாவை அறிமுகப்படுத்துகிறது ஈசே. ஆனால், ஒபாசிக்கு அதனைக் காணவே பிடிக்கவில்லை. ‘வந்தேறி’ என்று சொல்லி வெளியேற்ற முனைகிறது. ஆனால், ஈசே பிடிவாதமாக இருப்பதால் ‘பெண் சிங்கங்களுடன் முபாசாவை வளர்க்க வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது.

டாகா அரசனாக ஆவதில் இடையூறாக எவரும் வரக்கூடாது என்பதே அதற்குக் காரணம். இரு சிங்கங்களும் வளர்ந்தபிறகும் அந்த எண்ணம் ஒபாசியை விட்டு அகலவில்லை. இந்த நிலையில், ஒருநாள் அப்பகுதியை ஹிரோஸ் எனும் பனிக்காட்டு சிங்கமொன்றின் தலைமையிலான கூட்டம் சுற்றி வளைக்கிறது. டாகா உயிர் பிழைக்க வேண்டுமென்ற நப்பாசையில், அதனோடு முபாசாவை அனுப்பி வைக்கிறது ஒபாசி.

உயிராபத்தில் இரு சிங்கங்களும் அங்கிருந்து ஓடுகின்றன. பின்னாலேயே ஹிரோஸின் கூட்டம் துரத்துகிறது. இந்த நிலையில், வழியில் பெண் சிங்கமான ஷராபி, அதன் தோழனான ஜாஸு எனும் இருவாய்ச்சி பறவை, ரஃபிகி எனும் குரங்கு ஆகியவற்றை இரு சிங்கங்களும் எதிர்கொள்ள நேரிடுகின்றன.

இதுவரை விலங்குகள் காணாத, கனவு காண்கிற ‘மிலேலே’ எனும் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே முபாசாவுக்கு அவரது தாய் சிங்கம் சொல்லித் தந்த இலக்கு. அது குறித்த விஷயங்கள் ரஃபிகிக்கும் தெரிந்திருக்கிறது. ஐந்து உயிரினங்களும் ஒன்று சேர்ந்து ‘மிலேலே’ நோக்கிப் பயணிக்கின்றன. அவர்களைச் சிறு இடைவெளியில் ஹிரோஸ் கூட்டம் துரத்தி வருகிறது.

இறுதியில் யாருக்கு வெற்றி கிடைத்தது? சாதாரண சிங்கமாக இருந்த முபாசா, டாகாவையும் மீறி எப்படி காட்டு ராஜா ஆனது? இந்தக் கேள்விகளுக்குச் சில பாடல்கள், சில சண்டைக்காட்சிகள் மற்றும் அபாரமான விஎஃப்எக்ஸ் உடன் சிறப்பான காட்சியாக்கத்தின் வழியே பதிலளிக்கிறது மீதமுள்ள திரைக்கதை.

உண்மையைச் சொன்னால், இது ‘தி லயன் கிங்’ கதையில் ‘ப்ரிக்யூல்’ (prequel) என்று சொல்லலாம். அதாகப்பட்டது, முபாசாவின் தொடக்கத்தைச் சொல்கிறது இப்படம்.

ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு ‘முபாசா’ வெளியிடப்பட்டிருக்கிறது. அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம்புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஸ்மிருதி, எம்.ராஜேந்திரன், கீர்த்தி வாசன் உள்ளிட்ட பலர் தமிழில் இரவல் குரல் தந்திருக்கின்றனர்.

ஆங்கிலப்பட பாணியில், தமிழ் பதிப்பின் இறுதியில் வரும் டைட்டில் கார்டில் இவர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது உண்மையிலேயே மிகப்பெரிய கௌரவம். நட்சத்திர கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், இது போன்று வெளியாகும் இதர படங்களிலும் இதே போன்ற மரியாதை டப்பிங் கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டும்.

இந்தப் படத்தில் டீமோனாக வரும் சிங்கம்புலி, பம்பாவாக வரும் ரோபோ சங்கர் பேசுகிற வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், ஸ்மிருதி பேசிய வசனங்கள் வருமிடங்கள் ‘சீரியசாக’ திரையில் வந்து போனாலும்,

அவர்களே சிங்க உருவெடுத்து வந்தது போன்ற உணர்வு கிடைப்பது அருமை. ‘இங்க என்ன சொல்லுது’ என்று ரஃபிகி எனும் குரங்கு வசனம் பேசுவதாக ஒலிக்கும் விடிவி கணேஷின் குரல் தன்னிலை மறந்து நம்மைச் சிரிக்கச் செய்கிறது.

ஆங்கிலப் பதிப்பைப் பார்த்தவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு ‘தமிழ் டப்பிங்’ குழு அருமையாக உழைத்திருக்கிறது. அதற்காகத் தனியாக ஒரு ‘சபாஷ்’! காட்டு விலங்குகளை 4கே தரத்தில் படம்பிடித்தாற் போன்ற உணர்வைத் திரையில் தருகிறது ‘போட்டோரியாலிஸ்டிக்’ அனிமேஷன் முறையில் அமைந்த இதன் உருவாக்கம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அது தருகின்ற ஆச்சர்யங்கள் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெற்றோரையும் பெரியோரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. இப்படம் ஒரு ‘மியூசிகல்’ வகைமையில் அமைந்திருப்பதற்கு ஏற்ப இசையமைப்பாளர்கள் டேவ் மெட்ஸ்கர், நிக்கோலஸ் பிரிடெல் மற்றும் லின் மேனுவன் மிராண்டாவின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் லேக்ஸ்டனின் சட்டகக் கோணங்கள், பிளாஷ்பேக்கையும் சமகாலத்தையும் மாறி மாறிக் குழப்பமின்றி காட்டுகிற படத்தொகுப்பாளர் ஜோய் மேக்மில்லனின் உத்திகள்,

இயக்குனரின் உலகத்திற்குத் திரையில் வடிவம் தந்திருக்கும் தயாரிப்பு வடிவமைப்பாளர் மார்க் ப்ரெட்பெர்க்கின் கைவண்ணம் என்று சில ஆயிரம் பேரின் உழைப்பு ஒன்றிணைந்து இப்படத்தின் உள்ளடக்கத்தைச் செறிவானதாக ஆக்கியிருக்கிறது.

ஏற்கனவே ரசிகர்களுக்குத் தெரிந்த முடிவுகளைக் கொண்ட ஒரு கதையைச் சுவையான காட்சிகளின் வழியே திரைக்கதை அமைத்த வகையில் ஈர்க்கிறது ஜெஃப் நாதன்ஸனின் எழுத்தாக்கம்.

சிம்பா – நலா சிங்கங்கள் வெளியே சென்றுவிட, ஒரு மழைக்காலத்தில் அதன் குட்டியான கியாராவுக்கு ரஃபிகி கதை சொல்வதில் இருந்து தொடங்குகிறது ‘முபாசா’ திரைக்கதை.

இடையே டீமோனும் பம்பாவும் சில ‘கவுண்டர்கள்’ கொடுக்க, அதனை மீறித் தொடர்கிற அந்தக் கதையில் பல திருப்பங்கள் இடம்பெறுவதாகக் காட்சிகள் உள்ளன. அந்த பிளாஷ்பேக் உத்தி கதை சொல்லலில் தடைக்கற்களாக இருக்கின்றன. அதனை மீறி, ஒரு வெற்றிப்படத்தின் ‘ப்ரிக்யூல்’லை வெற்றிகரமானதாகத் தரக் கடுமையாக முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பேரி ஜென்கின்ஸ்.

கொஞ்சமாய் நகைச்சுவை, அவ்வப்போது பாடல்கள், ஆச்சர்யத்தை அதிகப்படுத்தும் வகையிலமைந்த விஎஃப்எக்ஸ் மாயாஜாலத்தோடு நாமும் முபாசா & கோ உடன் மிலேலே எனும் கனவு பூமி நோக்கிப் பயணித்த உணர்வைத் தருகிறது இப்படம்.

குழந்தைகளுக்குச் சொல்கிற கதைகளில் வருகின்ற நீதிகளே, அவர்களது எதிர்காலத்திற்கான தூண்டுகோலாக அமையும். அந்த வகையில் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது ‘முபாசா’. அதில் பெரிதாகக் கலப்படம் இல்லை என்பது நல்லதொரு விஷயம்.

நிச்சயமாகக் குழந்தைகள் இப்படம் கண்டு குதூகலிப்பார்கள். பாடல்கள் வருமிடங்களில் லேசாக அயர்ச்சியைச் சிலர் உணரலாம். அது போன்று சில காட்சிகளும் இதிலுண்டு.

அத்தடைகளைத் தாண்டிவிட்டால், குடும்பத்தோடு குதூகலமாகக் கண்டுகளிக்கிற அனுபவம் நிச்சயம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இந்த ‘முபாசா’வில் உண்டு. ‘புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் அது போதுமே’ என்பவர்களுக்கு இப்படம் திருப்தியைத் தரும்!